பாயும் புலி

‘பாண்டியநாடு’ படத்தில் இணைந்த விஷால்-சுசீந்திரன்-இமான் வெற்றிக்கூட்டணி மீண்டும் ‘பாயும் புலி’ படத்திற்காக இணைந்துள்ளது. இதில் விஷால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஜெயசீலன் கேரக்டரில் களம் புகுந்துள்ளார். இந்த ‘பாயும் புலி’ எப்படி வேட்டையாடியுள்ளது என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : விஷால், காஜல் அகர்வால், சூரி, சமுத்திரக்கனி, ஆனந்தராஜ், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே. மற்றும் பலர்
இசையமைப்பாளர் : இமான்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
இயக்கம் : சுசீந்திரன்
தயாரிப்பாளர் : வேந்தர் மூவிஸ்

கதைக்களம்…

ஜெயசீலன் (விஷால்) என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட். மதுரையில் நடக்கும் குற்றங்களை தடுக்க ஸ்பெஷல் அப்பாய்மெண்ட் பெற்று வருகிறார். இதனிடையே காஜலுடன் காதல் பணி மற்றும் சூரியுடன் காவல் பணி என இரட்டை சவாரி. ஒவ்வொரு ரவுடியை போட்டுத்தள்ள இவர்களின் ஆணிவேர் யார்? என்று தெரியவரும்போது அதிர்ச்சியாகிறார். எனவே, பாயும் புலியாக பாய்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதை சென்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

கதாபாத்திரங்கள்…

சாமி படத்தில் விக்ரம் அறிமுகம் போல… தான் ஒரு போலீஸ் என்பதை யாருக்கும் தெரியாமல் வாழ்கிறார் விஷால். பின்னர் சில ரவுடிகளை அழித்துவிட்டு காக்கி சட்டை அணிகிறார். ஆக்ஷன் காட்சிகளில் விஷால் எப்பவுமே பாயும் புலிதான். ஆக்ஷன் படம் என்பதால் பாடல் காட்சிகளில் ரொமான்ஸ் தேவையில்லை என்று நினைத்தாரோ? முகத்தில் டென்ஷன்.

முயல் குட்டி பாடலுடன் அறிமுகமாகிறார் காஜல் அகர்வால். பாடலும் இவரைப் போலவே ப்ரெஷ்ஷாக உள்ளது. இவரின் தங்கையாக ஐஸ்வர்யா தத்தா… அட இவரே எங்கேயோ பார்த்து இருக்குமே என்று நினைப்பதற்குள் மறைந்து விடுகிறார். பின்பு எங்கே போனாரோ தெரியவில்லை.

சூரி காட்சிகளை பார்க்கும்போது ஜில்லா படத்தில் விஜய்யுடன் வரும் காட்சிகளையே நினைவுப்படுத்துகிறார். சேம் கெட்டப். சூரியும் அவர் மனைவி வரும் காட்சிகளும் கலகல. பீர் அடித்துவிட்டு அதை மனைவியிடம் மறைக்க முயலும் காட்சிகள் ரசிக்கவைக்கிறது.

இவர்களுடன் வில்லன் சமுத்திரக்கனி. படத்தின் செகண்ட் ஹீரோ இவர்தான். ஆனால் வில்லன் வேடத்திற்கு ஏற்ற கம்பீரம் கொஞ்சம் குறைவே. மற்றொரு வில்லன் ஆர். கே. மிரட்டுவார் என்று பார்த்தால் அமைதியாக இருக்கிறார்.

அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், ஆனந்த்ராஜ், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, அருள்தாஸ், மனோஜ்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் ‘சிலுக்கு மரமே…’, ‘முயல்குட்டி’ பாடல்கள் மெலோடி. ஆனால் ‘சிலுக்கு மரமே’ பாடலில் உடைகள்… ‘கலாய்ச்சி பை’ பாடலை நினைவுப்படுத்துகிறது. திவாகர் பாடிய ‘மதுரக்காரி…’ பாடலில் அரங்க அமைப்புகள் நன்றாக உள்ளது. மால்குடி சுபா குரலில் ‘புலி… புலி.. பாயும் புலி’ பாடல் ஓகே.

வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரவுடி காட்சிகள், என்கெண்டர் மற்றும் இதர இரவுகாட்சிகள் அருமையாக உள்ளது.

நிறைய படங்களில் பார்த்த கதைதான். படத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆக்ஷன் செண்டிமென்ட், காமெடி என கமர்ஷியல் மசாலா தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் காவல்துறைக்கு ஏற்ற கம்பீரம் இல்லை. குடும்ப செண்டிமென்டில் பாஸ் மார்க் பெறுகிறார் இயக்குனர்.

மொத்தத்தில் பாயும் புலி… பாய்ச்சல் கொஞ்சம் குறைவே…

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்