பசங்க 2 விமர்சனம்

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் இது. இதில் முதன்முறையாக இவருடன் அமலா பால் இணைந்துள்ளார். இவர்களின் பசங்க செய்யும் சுட்டித் தனங்களை இனி பார்ப்போம்…

நடிகர்கள் : சூர்யா, அமலா பால், பிந்து மாதவி, கார்த்திக் குமார், வித்யா, ராம்தாஸ், நிசேஷ், பேபி வைஷ்ணவி, ஆருஷ் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : அரோல் கரோலி
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பாளர் : சூர்யா, பாண்டிராஜ்

கதைக்களம்…

கதையின் உள்ளே செல்லும் முன் சின்ன அறிமுகம். மூன்று முக்கிய தம்பதிகள்..

 1. ப்ரைவேட் ஜாப் கார்த்திக் குமார், பிந்துமாதவி இவர்களுக்கு நெயினா (வைஷ்ணவி) என்ற பெண் சுட்டி பெண்.
 2. பேங்க் மேனேஜர் ராமதாஸ், வித்யா இவர்களுக்கு கவின் (நிஷேஷ்) என்ற ஆண் சுட்டி பையன்.
 3. டாக்டர் சூர்யா, ஆசிரியை அமலா பால். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள்.

கவின், நெயினா… இவர்களின் குறும்புத்தனத்தால் நிம்மதியை இழக்கும் பெற்றோர்கள் பள்ளிகளை அடிக்கடி மாற்றி மாற்றி பின்னர் வேறு வழியில்லாமல் அவர்களை ஹாஸ்டலில் சேர்கின்றனர். பெற்றோர்களின் பாசத்தை இழக்கும் அவர்கள் ஹாஸ்டலிலும் கலாட்டா செய்து வீட்டுக்கே திரும்பி வருகின்றனர்.

பின்னர் சூர்யா, அமலாபாலை சந்திக்கும் இவர்களின் பெற்றோர்கள் தங்கள் தவறை உணர்ந்து குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதே இந்த சுட்டிகளின் கதை.

கதாபாத்திரங்கள்…

கவின்.. நயினா.. இந்த இரண்டு சுட்டிகள் செய்யும் குறும்பை ரசித்துக் கொண்டே இருக்கலாம். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பெற்றோர் திணறுவது சபாஷ்… உதாரணத்திற்கு….

 • எப்படி இருந்தாலும் கெஸ்ட் வந்தா ரைம்ஸ் சொல்ல சொல்லுவிங்க.. அதான் எல்லாம் முன்னாடியே பாடி காட்டினேன்.
 • அப்பா… இந்த ஸ்கூல்ல படிச்சா பர்ஸ்ட் ரேங்க் எடுக்கலாம். ஆனா பர்ஸ்ட் ரேங்க் ஒரு ஸ்டூடண்டுக்கு மட்டும்தானே கிடைக்கும். இங்க இவ்ளோ பேரு இருக்காங்க.

அழகு குழந்தைகள்.. அதை விட அழகான நடிப்பு. இவர்கள் விடுதியில் சேர்ந்ததும் நம்மை அறியாமல் கண்கள் கலங்கும். கண்டிப்பாக ரெண்டு செல்லத்துக்கும் திருஷ்டி சுத்தி போடனும்.

சூர்யாவின் ஆண் மகன் அபிமன் (ஆருஷ்)க்கு அந்த ஓவியக் காட்சி ஒன்றே போதும். அவரும் நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

ராமதாஸ் வங்கி அதிகாரியாக இருந்தும் சின்ன சின்ன திருட்டு பழக்கம் உள்ள காட்சிகள் சூப்பர். திரையில் இவர் தோன்றினாலே சிரிப்பு மழைதான். கூடவே நடிக்கவும் செய்திருக்கிறார். இவருடன் வித்யா அருமையான அம்மா.

கார்த்திக் குமார் பிந்து மாதவி.. பிள்ளைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதும் டென்ஷனில் புலம்புவதும் அப்படியே ஹை கிளாஸ் தம்பதிகள்.

சூர்யா, அமலா பால், இவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள். அன்பான குடும்பம். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு வாழும் வாழ்க்கை சூப்பர். குழந்தைகளின் அதிக திறமையை கண்டுபிடித்து அதனை ஊக்குவிக்கும் காட்சிகளில் இருவரும் கைதட்டல் பெறுகிறார்கள்.

சமுத்திரக்கனி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் பேசும் இரண்டு வார்த்தைகள் சாட்டையடி.

 • அரசு வேலை பார்ப்பவர்கள் அவர்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொல்வதாகட்டும், தமிழ் மீடிய குழந்தைகள் தமிழில் கெட்ட வார்த்தை பேசினால், இங்கிலீஷ் மீடிய குழந்தைகள் கெட்ட வார்த்தையை இங்கிலீஷில் பேசும் என்று சொல்வதாகட்டும் எல்லாம் நச்.

இவர்களுடன் சூரி, இமான் அண்ணாச்சி, இயக்குனர் ஆர் வி உதயகுமார், சீனுராமசாமி உள்ளிட்டோர் சிறப்பான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அரோல் கரோலி இசையில் சுட்டிகளுக்கு இரண்டு பாடல் என்றால் பெரியோர்களுக்கு ரெண்டு பாடல். அதில் ‘காட்டுக்குள்ள கண்ண கட்டி..’ மற்றும் ‘பூக்களை கிள்ளி வந்து..’ இரண்டும் மனதை விட்டு அகலாதவை.

குழந்தைகள் என்றாலே அழகுதான். அதற்கு மேலும் அழகு சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். கீப் இட் அப் சார்.

படத்தின் ப்ளஸ்…

 • சுட்டி குழந்தைகள் + கேரக்டர்கள்
 • உணர்வு + கமர்ஷியல் திரைக்கதை
 • வசனங்கள் (உதாரணம் கீழே)
 1. குழந்தைகள் பேசுவது கெட்ட வார்த்தைகள் அல்ல.. கேட்ட வார்த்தைகள்.
 2. முன்பு கல்வியை அரசு கொடுத்தது, சாராயத்தை தனியார் கொடுத்தனர் இன்று.. அப்படியே மாறிவிட்டது.
 3. மதிப்பெண் முக்கியமல்ல மதிப்பான எண்ணங்களே முக்கியம்.

எல்லாவற்றையும் விட மேலாக குழந்தைகள் உலகத்திற்கே நம்மை கூட்டிச் சென்ற இயக்குனர் பாண்டிராஜ்க்கு ஒரு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கலாம். குழந்தைகளுடன் பயணித்துக் கொண்டே சமூகத்திற்கான மெசேஜ் சொன்னதற்கு சபாஷ்.

இப்படி அழகான படத்தை கொடுத்த சூர்யா, பாண்டிராஜ்க்கு.. கன்கிராட்ஸ்.

மொத்தத்தில் பசங்க 2… ‘அழகான சுட்டி ஆட்டோகிராப்’

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்