புகழ் விமர்சனம்

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் சார்ந்த படமாக வெளியாகிறது புகழ். இன்றைய இளைஞர்களுக்கும் அரசியலுக்கும் தேவையான கருத்துக்கள் இப்படத்தில் உள்ளது.

ஜெய் மற்றும் சுரபி இணைந்துள்ள இப்படம் புகழை தேடித்தருமா..? என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : ஜெய், சுரபி, கருணாஸ், ஆர் ஜே பாலாஜி, ரஜனி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : விவேக் மற்றும் மெர்வின்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
படத்தொகுப்பு : வெங்கடேஷ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
இயக்கம் : மணிமாறன்
தயாரிப்பாளர் : வருண் மணியன், சுஷ்சாந் பிரசாத், கோவிந்தராஜ்

கதைக்களம்…

தன் ஊரில் எந்த தவறு நடந்தாலும் தட்டிக்கேட்பவர் புகழ். அண்ணன் கருணாஸ் உடன் சேர்ந்துக் கொண்டு பூக்கடையை கவனித்து வந்தாலும், நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவது, ஊர் பஞ்சாயத்து என சகலமும் செய்து வருகிறார்.

100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் மைதானம்தான் ஜெய் நண்பர்களின் ஆடுகளம். இதில் பயிற்சி பெறும் நண்பர்கள் மாநில அளவில் சாதிப்பதும், அரசு உத்யோகத்திலும் தேர்ச்சி பெறுகின்றனர்.

ஒரு சூழ்நிலையில் கல்வி அமைச்சர் ஊர் சேர்மன் உதவியுடன் அந்த மைதானத்தில் மிகப்பெரிய கட்டிடம் கட்ட நினைக்கிறார். அந்த சேர்மனோ ஜெய்யின் நண்பரை அரசியலில் கொண்டு வந்து, அவர் மூலம் சாதிக்கிறார்.

இவை அனைத்தையும் அறிந்த ஜெய் எப்படி சதித்திட்டங்களை முறியடித்தார் என்பதே புகழின் மீதி கதை.

pugazh

கதாபாத்திரங்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஜெய். குடும்பம், நண்பர்கள், சமூக சேவை எதிலும் படு யதார்த்தம். அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார்.

நண்பர்களை அரசியலுக்கு கொண்டுவருவது, நல்லது செய்ய முடியும் என நினைக்கும் காட்சிகள் நட்பின் ஆழத்தை உணர்த்தியிருக்கிறது.

சுரபி நடிப்பில் மெச்சூர்ட்டி வந்துள்ளது. ஆனால் ரொமான்சில் இவருக்கு பெரிதாக வேலை கொடுக்கவில்லை. மற்றபடி தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

pugazh movie still

ஆர் ஜே பாலாஜியின் ஒன் லைனர் ஓகே. ஆனால் இவரை நம்பி வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். இவருக்கு வாய்பூட்டு போட்டுவிட்டார் டைரக்டர்.

தன் தம்பியை கொல்லுடா.. என் வில்லன் முன் கூட்டி வந்து நின்று கெத்து காட்டியிருக்கிறார் கருணாஸ். அரசியலை வெறுத்தாலும் குடும்பத்திற்காக இவர் செய்யும் ஒவ்வொன்றும் நச் ரகம்.

சேர்மன் கேரக்டரில் தாஸ் ஆக வரும் மாரிமுத்து மிரட்டியிருக்கிறார். ஊரில் எல்லாருடனும் பழகினாலும், ஒவ்வொருவரையும் மிரட்டும் காட்சிகள் அரசியல்வாதிகளின் நிஜ உருவம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையை கவனித்த இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் ஆகிய இருவரும் பாடல்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். சில பாடல்களை ரசித்தாலும் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் காட்சிகளுக்கு கை கொடுத்து இருக்கிறார். ஒவ்வொன்றையும் மிகைப்படுத்தாமல் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

படத்தின் ப்ளஸ்…

  • யதார்த்தமான கேரக்டர்கள் (ஜெய், கருணாஸ், தாஸ் உள்ளிட்ட கேரக்டர்கள்)
  • சமூக பிரச்சினையில் ஒன்று கூடும் இளைஞர்கள்
  • அரசியலை கலாய்க்கும் பன்ச் வசனங்கள்

படத்தின் மைனஸ்…

  • யதார்த்த ஹீரோ திடீரென மாஸ் ஹீரோவாக மாறுவது
  • இரண்டாம் பாதியில் படத்தின் வேகத்தில் தடுமாற்றம்
  • ஆர் ஜே பாலாஜிக்கு இன்னும் வாய்ப்பளித்து படத்தை கொஞ்சம் கலகலப்பாக்கி இருக்கலாம்.

pugazh movie still action

படம் அரசியல் களம் என்பதால் காதல் களத்திற்கு பெரிய வேலையில்லை. ஆனாலும் குடும்ப செண்டிமென்டை கொடுத்து, அதனை பூர்த்தி செய்து விடுகிறார் மணிமாறன்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் இளைஞர்கள் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறார். அரசியலை கண்டு அஞ்சினால் மக்கள் என்றும் ஏமாளிகள்தான் என்பதை காட்சிகளால் பாடம் நடத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் புகழ்… இளைஞர்களின் அரசியல் பலம்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்