புறம்போக்கு என்கிற பொதுவுடமை

வித்தியாசமான வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனரின் படமென்பதாலும் முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ளதாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு சற்று அதிகமே. ரசிகர்களின் ரசனையை நிறைவேற்றினாரா? என்பதை பார்ப்போம்…

புறம்போக்கு கதை…

கம்யூனிஸ கொள்கையும் புரட்சி எண்ணங்களையும் கொண்டவர் பாலுச்சாமி (ஆர்யா). இவரின் செயல்கள் அரசாங்கத்தால் எதிர்க்கப்படுவதால் இவருக்கு தூக்குதண்டனை அளிக்கிறது கோர்ட். இவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பொறுப்பு ஏற்கிறார் ஐபிஎஸ் அதிகாரி மெக்காலே (ஷாம்).

ஹேங்மேன் எமலிங்கமாக விஜய் சேதுபதி. குற்றவாளிகளை தூக்கிலிடுவதை பரம்பரையாக செய்து வந்தாலும் அதில் சிறிதளவு கூட திருப்தியில்லாதவர். இந்நிலையில் தங்கள் புரட்சி படையை சேர்ந்த ஆர்யாவை தண்டனையில் இருந்து காப்பாற்ற திட்டமிடுகின்றனர் குயிலி (கார்த்திகா) குழுவினர். இவர்களின் நல்லெண்ணத்தை புரிந்து இவர்களுக்கு உதவி செய்ய முனைகிறார் விஜய் சேதுபதி.

தண்டனை நிறைவேற்றப்பட்டதா? ஆர்யா காப்பாற்றப்பட்டாரா? புரட்சி எண்ணங்களை செயல்படுத்தினாரா? என்பதே மீதமுள்ள கதை.

கதாபாத்திரங்கள்…

புரட்சிப்படை ஆர்யா தன் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார். சாவை கண்டு பயப்படாத கேரக்டர். மனிதர் வாழ்ந்து இருக்கிறார். வசனங்களும் இவருக்கு பக்கபலமாக அமைந்துவிட்டது.

மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் அப்ளாஸ் அள்ளியது என்னவோ விஜய் சேதுபதிதான். நாயகர்களின் கேரக்டரை இயக்குனர் பிரித்து கொடுத்திருந்தாலும் க்ளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து முன்னிலை வகுக்கிறார். சீரியஸான சப்ஜெக்டில் இவரே மிகப்பெரிய ஆறுதல்.

போலீஸ் அதிகாரியாக ஷாம். பணிவும் நேர்மையும் கொண்ட அதிகாரியாக நடித்து கொஞ்சம் மிரட்டவும் செய்திருக்கிறார்.

புரட்சிப்பெண்ணாக கார்த்திகா. வித்தியாசமான கதாபாத்திரத்தில் பாஸ் மார்க் வாங்குகிறார். படத்தில் நானும் ஒரு ஹீரோதான் என்பது போல புல்லட்டில் வருகிறார். புரட்சியிலும் கொஞ்சம் கவர்ச்சியாகவே வருகிறார். புரட்சி வசனங்களை விட இவரது புருவங்களையே பார்க்கத் தோன்றுகிறது.

நீர்ப்பறவை படத்தில் தன்னை நிரூபித்த வெற்றி இதிலும் நம் கவனம் ஈர்க்கிறார். பார்வையில் புரட்சிக்கான வெறி கொண்டு அலைகிறார். சபாஷ். இவருக்கான வெற்றி வெகுதூரமில்லை.

அறிமுக இசையமைப்பாளர் வர்ஷனின் இசையில், ஆழ்வௌ்ளி கிழங்கு… மெரினா பீச் போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கும். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை பிரமாதம்.

ஏகாம்பரத்தின் ஔிப்பதிவு பேச வைத்திருக்கிறது. முழுக்க முழுக்க சிறைச்சாலை காட்சிகள் என்றாலும் பார்க்கச் செய்திருக்கிறார்.

மசாலா நிறைந்த தமிழ் படங்களில் தன்னை வேறுபடுத்தி காட்டியுள்ளார் இயக்குனர் ஜனநாதன். ஒரு ஹேங்மேனின் மனநிலையை நன்றாக பதிவு செய்துள்ளார். ‘மகாநதி’ படத்திற்கு பிறகு ஜெயில் வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார். இந்திய சட்டத்தில் இனி  தூக்கு தண்டனை தேவையா என்ற கேள்வியை எழ செய்திருக்கிறார். வசனங்கள் தைத்தட்டல் பெறுகிறது

விறுவிறுப்பான திரைக்கதை. ஆனால் முதல் பாதி ஏன் நகரவில்லை என்று கேட்டபடி தியேட்டரை விட்டு ஆடியன்ஸ் நகருகின்றனர். இயக்குனர் கவனிக்கவில்லையோ? படத்தில் காதல் இல்லையே… ஒரு ஆடல் வைக்கலாமே என இயக்குனர் நினைத்திருப்பார் போல. ஆர்யா-கார்த்திகா டூயட் பாடல் தேவையற்றது.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை – தனி மனித உரிமையின் புரட்சி!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்