ரஜினிமுருகன் விமர்சனம்

தடைகளை உடைத்தெறிந்து பொங்கல் விருந்தளிக்க வந்துள்ளார் ரஜினிமுருகன். இதில் ‘நம்பி வாங்க… சந்தோஷமா போங்க..’ என்று சிவகார்த்திகேயனும் அழைத்துள்ளார். உபசரிப்பு எப்படி உள்ளது என்பதை பார்த்து வருவோமா?

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண், ரோபோ சங்கர், கனகா, ஞானசம்பந்தம் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : இமான்
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : பொன்ராம்
தயாரிப்பாளர் : லிங்குசாமி (திருப்பதி பிரதர்ஸ்)

 

கதைக்களம்…

ரஜினிமுருகன் (சிவகார்த்திகேயன்) தன் தாத்தா (ராஜ்கிரண்) மீது அதிகம் பாசமுள்ளவர். தன்னுடைய பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் செட்டிலாகிவிட, வேலை வெட்டி இல்லாமல் தன்னையே சுற்றிவரும் பேரனுக்கு தன் சொத்தை பாகம் பிரித்து கொடுக்க நினைக்கிறார்.

எனவே தன் பிள்ளைகளை எல்லாம் தன் கிராமத்திற்கு வரவைத்து சொத்தை பாகம் பிரிக்கும் வேளையில் சொத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது, நானும் அவருடைய பேரன்தான் என ஒரு ஆதாரத்துடன் நுழைகிறார் சமுத்திரக்கனி. அதன் பிறகு அந்த குடும்பத்தில் என்ன நடந்தது? ரஜினிமுருகனுக்கு சொத்து கிடைத்ததா? என கேள்விகளுக்கு விடை தருகிறார் இயக்குனர்.

கதாபாத்திரங்கள்…

தனக்கு ஏற்ற கதையை தேர்ந்தெடுத்திருக்கும் சிவாவுக்கு ஒரு சியர்ஸ். படத்தில் கீர்த்தியுடன் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட இவருக்கு சூரியுடன் செம கெமிஸ்டரி. இருவரும் இணைந்து வரும் காட்சிகள் அனைத்தும் காமெடியின் கல கல.. கட்டங்கள்.

பாடல் காட்சிகள், டயலாக் டெலிவரி ஆகிய காட்சிகளை ரஜினியின் மேனரிசத்தை நினைவுப்படுத்துகிறார் சிவா.

கீர்த்தி சுரேஷ் அழகுடன் கூடிய நடிப்பு. ‘உன் மேல ஒரு கண்…’ என்று இவர் பாடும்போது ரசிகர்களின் நெஞ்சை கொள்வது நிச்சயம். இனிமே இளைஞர்களின் கண் இவர் மேலதான். வார்ம் வெல்கம் கீர்த்தி.

சிவாவுடன் சேர்ந்தால் சூரிக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைக்கும் போல. சிவாவும் ராஜ்கிரனும் காமெடி செய்து விட, நான் எதுக்குடா என்று கேட்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் ப்ளீஸ் ஹெல்ப் மீ என்று திட்டும்போது செம.

இவர்களுடன் போட்டி போட்டு நடித்திருக்கும் இரண்டு முக்கிய நபர்கள் ராஜ்கிரன் மற்றும் சமுத்திரக்கனி. வில்லத்தனத்தில் சமுத்திரக்கனி வைக்கும் ட்விஸ்ட்கள் கலக்கல் ரகம்.

தன் பிள்ளைகளை வர வைக்க ராஜ்கிரன் போடும் திட்டம் சூப்பர். பேரக்குழந்தைகளுக்கு தமிழ் தெரியாமல் போவதால்… ‘உன் சந்ததிக்கு தமிழே நீ சொல்லிக் கொடுக்கல.. என்னை பத்தி என்ன சொல்லி இருப்ப? என்று கேட்கும்போது தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் நிலை தெளிவாக தெரிகிறது.

இவர்களுடன் ஞானசம்பந்தம் அவரின் நண்பராக வரும் அச்சுயுத்குமார் இருவரும் நல்ல தேர்வு. அதுவும் ரஜினி ரசிகராக வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து.

இந்த கேரக்டர்களுடன் வரும் பஞ்சாயத்து சாட்சிகள், வாழைப்பழம் கேட்கும் நபர், போலீஸ்காரர்கள் என அனைவரும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் மற்றும் இசையை பற்றி சொல்லவே வேண்டாம். ஏற்கெனவே ஹிட்டடித்து விட்டன. கவிஞர் யுகபாரதி + இமான் கூட்டணியில் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கலாம். உன் மேல ஒரு கண்ணு… என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, ஜிகிரு… ஜிகிரு… ஆவி பறக்கும் டீக்கடை… ரஜினிமுருகன் டைட்டில் சாங்… என அனைத்தும் ரசிகர்களுக்கான விருந்து.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் படம் கூடுதல் அழகு பெறுகிறது. சிவா + கீர்த்தி காஸ்ட்யூம்… சபாஷ் சத்யா. நல்ல செலக்ஷன். அதுபோல பிருந்தா தினேஷ் பாபா பாஸ்கரின் நடன அமைப்புகள் துள்ளல் ரகம். படத்தின் வெற்றிக்கு இது பெரிதும் கைகொடுக்கும்.

படத்தின் ப்ளஸ்…

  • சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷன்
  • ராஜ்கிரண் இறக்கும் காட்சி + பாடல்கள் + காமெடி
  • வன்முறை இல்லாத மதுரை களம்
  • வாழைப்பழ காமெடி + பஞ்சாயத்து + பாத ஜோசியம்

படத்தின் மைனஸ்

  • டிவியில் அடிக்கடி பார்த்துவிட்டதால் பாடல்களை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
  • கீர்த்தியின் திடீர் காதல் + வருத்தப்படாத வாலிபர் சங்கம் சாயல்

பொன்ராம்… இவருக்கு கிடைத்த பொன் முட்டை இடும் வாத்து சிவா. வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் இளைஞர்களை கவர்ந்த இவர், இதில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கவர்கிறார். மதுரை களம் என்றாலும் வன்முறை இல்லாத பஞ்சாயத்து காட்சிகள் நல்ல முயற்சி. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ட்ரீட் தந்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில்… ரஜினி முருகன் தரிசனம் மகிழ்ச்சி தரும்.!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்