ரஜினிமுருகன் பாடல் விமர்சனம்

‘மனம் கொத்தி பறவை’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களை தொடர்ந்து இமான்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘ரஜினிமுருகன்’. இரண்டு படங்களில் ரசிகர்களை கவர்ந்த இவர்களது பாடல் கூட்டணி இம்முறை எப்படி என்று கேட்போம் (ஸாரி) பார்ப்போம்…

 

1) ரஜினிமுருகன் டைட்டில் சாங்…
    பாடலாசிரியர் : யுகபாரதி
    பாடியவர் : சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் குரலில் அடுத்த ஹிட் பாடல் தயார். கன்.. கன்.. ரஜினிமுருகன் என ‘GUN’னாக இப்பாடல் ஒலிக்கிறது. இதில் சிவகார்த்தி வாய்ஸை சிறிது மாடுலேட் செய்து, ஸ்லாங் மாற்றி பாடியிருக்கிறார். ‘நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு… கிங்கு…’ என்ற வரிகளும் இதில் அடங்கியிருக்கிறது. இது ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்களின் ஓப்பனிங் பாடலாக சிவகார்த்திகேயனுக்கு அமையும் எனத் தெரிகிறது.

 

2) உன்மேல ஒரு கண்ணு
     பாடலாசிரியர் : யுகபாரதி
     பாடியவர்கள் : ஜிதின் ராஜ், மஹாலட்சுமி ஐயர்

முறைப்பொண்ணை பார்த்து நாயகன் பாடும் பாடல் இது. நாயகியும் காதலை ஏற்றுக்கொண்டு பாடுகிறார். கீர்த்தி சுரேஷின் அறிமுகப் படத்தில் அவருக்கு அருமையான ஒரு கிராமத்து டூயட் அமைந்துள்ளது. ஆனால் பலமுறை கேட்ட இளையராஜாவின் மெட்டு பாடல்களையே இப்பாடல் நினைவுறுத்துகிறது.

 

3) என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…
பாடியவர்கள் :
இமான், ஆர்யன் தினேஷ், சிவகார்த்திகேயன்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… என்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் டயலாக்குகளை வைத்து பாடல் தொடங்குகிறது. இமானின் இனிமையான குரலில் காதல் சோக பாடல் உருவாகியுள்ளது. இனி இப்பாடல் டாஸ்மாக், டீ கடை போன்ற இடங்களில் நிச்சயம் ஒலிக்கும். இன்றைய நவீன காலத்துக்குகேற்ற காதல் தோல்வி பாடல் இது.

 

4) ஆவி பறக்கும் டீக்கடை…
பாடியவர்கள் :
வீ.எம். மகாலிங்கம், படவா கோபி

டீக்கடையில் உள்ள சமாச்சாரங்களை காதலியோடு இணைத்து அருமையாக பாடல் வரிகளை எழுதியுள்ளனர். டீ, பன்னு, சீனி, கடை பாய்லர், சுக்கு மல்லி காபி, டேஸ்ட், பூஸ்ட் என வார்த்தைகளை இணைத்து டீக்கடையை பூக்கடையாக மாற்றியுள்ளனர். இப்பாடலின் இடையே கேட்கும் பழைய காலத்து வானொலி விளம்பர குரல்கள் இன்றைய ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். இவர்களின் டீக்கடைக்கு இதுஒரு விளம்பர பாடலாக உள்ளது.

 

5) ஜிகிரு… ஜிகிரு…
பாடியவர்கள் :
திவாகர், கல்பனா ராகவேந்தர்

நாட்டுபுறப் பாடல் போன்ற இதமாக தொடங்கும் இப்பாடல் பின்பு செம குத்து பாடலாய் ஒலிக்கிறது. திவாகர் குரலில் குஷியை உண்டாக்கும் இப்பாடல் கேட்டவுடனே குழந்தைகளை நிச்சயம் ஆட்டம் போடவைக்கும். கல்பனாவின் குரலும் அதற்கேற்றபடி அம்சமாய் ஒலிக்கிறது. இளமை துள்ளலுடன் இனி கச்சேரிகளில் அடிக்கடி கேட்கலாம்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்