ரோமியோ ஜூலியட்

‘நிமிர்ந்து நில்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வந்துள்ள படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் நிமிர்ந்து நிற்பாரா? ‘எங்கேயும் காதல்’ படத்தில் இணைந்த ஜெயம் ரவி- ஹன்சிகா மீண்டும் இணைந்துள்ள இதுவும் காதல் கதையே… இவர்களின் கெமிஸ்டரி இந்த முறை ஒர்க்அவுட் ஆகியுள்ளதா என்பதை பார்ப்போம்…

நடிகர்கள்: ஜெயம் ரவி, ஹன்சிகா, விடிவி கணேஷ், பூனம் பஜ்வா, வம்சி கிருஷ்ணா, சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா
ஒளிப்பதிவு: சௌந்தர்ராஜன்
இசை: இமான்
இயக்கம்: லக்‌ஷ்மன்
தயாரிப்பு: நந்தகோபால்
கதைக்களம்

எதையும் பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொள்ளும் கார்த்திக் (ஜெயம் ரவி) ஒரு ஜிம் டிரெய்னர். இதனால் பல திரையுலக நட்சத்திரங்கள் இவருக்கு நல்ல பழக்கம். அதில் ஒருவர்தான் விடிவி கணேஷ். ஏர்ஹோஸ்டஸ் ஐஸ்வர்யா (ஹன்சிகா) பணக்கார வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர். இவர்கள் இருவரும் சந்திக்க ஜெயம் ரவி மிகப்பெரிய பணக்காரர் என்று நினைத்து காதல் கொள்கின்றார் ஹன்சிகா.

பின்னர் அது உண்மையில்லை என்று தெரியவரும்போது காதலை முறிக்கிறார். பின்னர் வம்சி கிருஷ்ணாவுடன் நிச்சயம் செய்து கொள்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ஜெயம் ரவி, உன்னை போன்ற ஒரு பெண்ணை எனக்கு கட்டி வை. இல்லையென்றால் உன்னை நிம்மதியாக வாழவிட மாட்டேன் என்று மிரட்ட அதன்பின் ஹன்சிகா என்ன செய்தார்? அவரின் திருமணம் என்ன ஆனது? ஜெயம் ரவிக்கு காதலி கிடைத்தாளா? என்பதே இந்த ‘ரோமியோ ஜூலியட்’டின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

ஜெயம் ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். காதலிப்பதும், பின் காதலிக்காக உருகும் காட்சிகளில் பாஸ் மார்க் வாங்குகிறார். அதன் பின் வேறு ஒரு காதலி வேண்டும் என்ற காட்சிகளில் இன்னும் மிரட்டியிருக்கலாம். காதல் படம் என்பதால் வில்லத்தனம் செய்யவில்லையோ? ஜிம் டிரெய்னருக்கான உடற்கட்டு மிஸ்ஸிங்.

ஹன்சிகா பணக்கார மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதும் பின் இல்லை என்று தெரிந்த பின் கோபப்படுவதும் நன்றாக செய்திருக்கிறார். அதன்பின் ஒரு நாள் ஜெயம் ரவியை அழைத்து ஊர் சுற்றி செலவு செய்யவைக்கும் காட்சிகளில் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்குகிறார். (என்னப்பா இவ இப்படி பண்றாளே என்று ஆடியன்ஸ் திட்டுகின்றனர்). நன்றாக மெலிந்தும் காணப்படுகிறார் ஜூலியட். என்ன காரணமோ?

விடிவி கணேஷ் சில வசனங்கள் மூலம் கைத்தட்டல் பெறுகிறார். பூனம் பஜ்வா இடைவேளைக்கு பிறகே வருகிறார். வரும் காட்சிகளில் கவர்ச்சியாக அழகாக செய்திருக்கிறார். காதலை விட்டு கொடுக்கும் காட்சிகளில் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார். வம்சி கிருஷ்ணாவும் நடித்திருக்கிறார்.

அனிருத் பாடிய ‘டண்டனக்கா..’, அந்தோனி தாசின் ‘அடியே இவளே…’ பாடல் நிச்சயம் எழுந்து ஆடவைக்கும். இமான் இசையில் மற்ற பாடல்கள் சுமார். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகே ரகம்.

எதற்காக டிஆர் பாடலுக்கு பிரச்சினை எழுந்தது என்றே தெரியவில்லை. ஜெயம் ரவியை டிஆர் ரசிகராக காண்பித்து ‘டண்டனக்காக…’ பாடலோடு முடிக்கின்றனர்.

ஹன்சிகா மறுபடி தேடிவரும் போது ஜெயம் ரவி பேசும் வசனங்கள் சூப்பர். பணத்தாசை பிடித்து காதலித்தவனை ஏமாற்றும் பெண்களுக்கு காட்சிகள் மூலம் பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குனர். அவரே ஆண்கள் தன்னை ஏமாற்றுபவளை கூட ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார். (பாதிக்கப்பட்டிருப்பாரோ?)

டைட்டில் கார்டு போடும் போது எழும் கரகோஷம் காதை கிழிக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என காண்பித்து சூர்யாவை காட்டவில்லையே என்ற ஆதங்கம் எழுந்தது. இந்த கரகோஷம் க்ளைமாக்ஸ் காட்சியில் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு மற்றொரு ‘லவ் டுடே’ கிடைத்திருக்கும். ஆனால் ஓராயிரம் தமிழ் சினிமாவின் க்ளைமாக்ஸே இப்படத்திலும் உள்ளது.

மொத்தத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ வழக்கமான காதல் பார்முலா

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்