ருத்ரமாதேவி விமர்சனம்

‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ‘ருத்ரமாதேவி’ படத்தில் அந்த அரசியாகவே நடித்துள்ளார். ருத்ரமாதேவி என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : அனுஷ்கா, அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், நித்யா மேனன், கேத்திரின் தெரசா, பிரம்மானந்தம், மதுமிதா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : இளையராஜா
ஒளிப்பதிவு : அஜயன் வின்சென்ட்
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்
இயக்கம் : குணசேகர்
தயாரிப்பாளர் : என். ராமசாமி

கதைக்களம்…

காக்கத்திய வம்ச அரச குடும்பத்தின் வாரிசாக ருத்ரமாதேவி அனுஷ்கா பிறக்கிறார். ஆனால் ஆண் வாரிசு இல்லை என்று தெரிந்தால் சிற்றரசர்கள் மற்றும் எதிரிகளை அடக்க முடியாது என்பதால் பிறந்தது ஆண் இளவரசன் என்றும் கூறி மகளை வளர்க்கிறார்கள்.

ஆனால் இளவரசருக்குரிய அனைத்து பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்து ஆளாக்கின்றனர். அவரும் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு மக்களையும் ராஜ்ஜியத்தை காப்பாற்றி வருகிறார். இடையில் நித்யாமேனனையும் மணக்கிறார். (ஆனால் ‘அது’ எப்படி என்று கேட்காதீர்கள்?) ஒரு சூழ்நிலையில் நம் நாட்டை ஆளுவது இளவரசன் அல்ல இளவரசிதான் என்று உண்மை தெரியவரும்போது மக்களும் சிற்றரசர்களும் இவரை ஏற்க மறுக்கின்றனர். இதனால் நாட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்.

அதன்பின்னர் நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற என்ன செய்தார் அனுஷ்கா? குடும்ப வாழ்க்கை என்ன ஆனது? எதிரிகளை எப்படி வென்றார்? என்பதே க்ளைமாக்ஸ்.

 கதாபாத்திரங்கள்…

இப்படத்தில் எத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் நம்மை அதிரடியிலும், அழகிலும் கவர்ப்பவர் அனுஷ்காதான். இவருடைய கேரக்டரில் தற்போதுள்ள எந்த நடிகையும் நினைத்து பார்க்க முடியவில்லை.

இவருடைய அறிமுக காட்சியே அசத்தல்தான். சண்டையிடும் காட்சியிலும், அரச திட்டம் தீட்டுவதிலும், மக்களை கட்டி காப்பதிலும் நம்மை கவர்கிறார். பெண் உடையில் வரும் காட்சியில் தரிசனத்திற்கு குறை வைக்கவில்லை.

இவருடன் நித்யாமேனன், கேத்ரின் தெரசா இருவரும் அழகுப் பதுமைகளாக வந்து பெண்களையும் கவர்ந்து செல்கிறார்கள்.

அரசர் காலத்து படமாக முழுவதும் இருந்தாலும் அல்லு அர்ஜூன் வந்தவுடன் படத்தை போக்கை மாற்றிவிடுகிறார். மிரட்டலான நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஆனால் தெலுங்கு டப்பிங் வார்த்தைகளை தமிழில் பயன்படுத்தியுள்ளது சற்று நெருடலே.

இவர்களுடன் ராணா… காதலிக்காக ஏங்குவதும்… நண்பர் அனுஷ்கா சொல்வதை கையாள்வதிலும் சபாஷ் பெறுகிறார். படத்தின் இறுதி காட்சிகளில் என்ன ஆனார்?

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்யா மேனன், கிருஷ்ணம் ராஜ், விக்ரம்ஜித், பாபா சேகல், ஹம்சா நந்தினி ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்…

முக்கியமாக முதலில் பாராட்டப்பட வேண்டியவர் கலை இயக்குனர் தோட்டாதரணி. அரசர் காலத்தை கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். கிராபிக்ஸ் சில காட்சிகளை கைவிட்டாலும் இவர் ஆறுதல் தருகிறார். அஜயன் வின்சென்ட் தன் ஒளிப்பதிவு மூலம் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளார்.

பின்னணி இசையில் நான் எப்பவுமே ராஜாதான் என நிரூபித்துள்ளார் இளையராஜா. ‘அந்தரப்புரத்து செந்தூரம்…’ மற்றும் ‘பௌர்ணமி பூவே…’ பாடல் கேட்கும் ரகம்.

படத்தின் ப்ளஸ்…

  • தோட்டாதரணி கலை
  • அனுஷ்கா + ராணா + அல்லு கேரக்டர்ஸ்
  • இளையராஜாவின் பின்னணி இசை
  • அரசர் கதையில் மாறுபட்ட கதை

படத்தின் மைனஸ்…

  • சில கிராபிக்ஸ் + சண்டை காட்சிகள்
  • பருவ வயதுக்கு பின் பெண்னை எப்படி மறைப்பது?
  • இரண்டாம் பகுதியின் நீளம்
  • இடையே ஒட்டாத வசனங்கள்

எப்போதும் நாம் பார்த்து அலுத்துபோன உள்ள அரசர் காலத்து கதையாக இல்லாமல் புதிய களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். சபாஷ் குணசேகர். ஆனாலும் சிற்றரசர்கள் என்பது பழையதுதான். அதற்கு வேறு வழியில்லை.

ஆனால் இளவரசர் பெரியவர் ஆகியும் மீசையோ தாடியோ வரவில்லையா? அட்லீஸ்ட் விக் கூட வைக்க தோணவில்லையா? எல்லா ஆண்களும் அப்படியே இருக்க அனுஷ்காவை மட்டும் அப்படியே விடுவதா? ஆங்காங்கே தெலுங்கு வாடை அதிகமாக இருப்பதால் முழுவதுமாக ஒன்ற முடியவில்லை.

மொத்தத்தில் ‘ருத்ரமாதேவி’ : வீரம் நிறைந்தவளே…

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்