சகலகலா வல்லவன் – அப்பாடக்கர்

‘நிமிர்ந்து நில்’ படத்தில் ஆக்ஷன், ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ரொமான்ஸ் என ஸ்கோர் செய்த ஜெயம்ரவி, சகலகலா வல்லவன் (அப்பாடக்கர்) படத்திற்காக காமெடி களம் கண்டுள்ளார். இவருக்கு காமெடி கைகொடுத்துள்ளதா? என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி, பிரபு, ரேகா, ராதாரவி, ஜான் விஜய், கும்கி அஸ்வின், பிளாக் பாண்டி, தளபதி திணேஷ், சித்ரா லட்சுமணன் மற்றும் கௌரவ தோற்றத்தில் பூர்ணா (ஐட்டம் டான்ஸ்)
இசையமைப்பாளர் : தமன்
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இயக்கம் : சுராஜ்
தயாரிப்பாளர் : லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்

கதைக்களம்…

ஒரே கிராமத்தில் இருக்கும் இரண்டு எதிரிகள் ஜெயம் ரவி, சூரி. இந்த பிரவினரிடையே தேர்தல், மோதல் என களைக் கட்டுகிறது. இடையில் மொட்டை ராஜேந்திரன் அதகளம் வேறு. இதில் சூரியின் முறைப்பெண் அஞ்சலியை காதலிக்கிறார் ஜெயம் ரவி. எனவே காதலுடன் கவர்ச்சியும் இணைந்து கதை கலகலப்பாக நகர்கிறது. ஒரு சூழ்நிலையில் தன் மாமன் மகளை த்ரிஷாவை மணக்கிறார் ஜெயம் ரவி.

ஆனால் சிட்டி வாழ்க்கை வாழும் த்ரிஷாவினால் கிராமத்தான் ரவியுடன் வாழமுடியவில்லை. இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுக்கும் வேளையில் த்ரிஷா கிராமத்து தேர்தலில் நிற்கிறார். இவரை எதிர்த்து அஞ்சலி நிற்கிறார்? ஜெயித்தது யார்? மனைவியா? காதலியா? விவாகரத்து ஆனதா? என்பதை சிரித்து சிரித்து வயிறு வலிக்க சொல்லியிருக்கிறார் சுராஜ்.

கதாபாத்திரங்கள்…

ஜெயம் ரவி தற்போது எல்லா விதமான கேரக்டர்களையும் சவாலாக எடுக்க ஆரம்பித்து விட்டார். தன்னால் முழுநீள காமெடி படத்தில் அசத்த முடியும் என இறங்கி அடித்திருக்கிறார். காதல், செண்டிமண்ட், ஆக்ஷன் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். படு ஸ்மார்ட்டாக இருக்கிறார் இந்த அப்பாடக்கர் ஜி.

த்ரிஷாவிற்கு இதில் அவர் ஏற்றிடாத வேடம். கோபம், வெறுப்பு, அன்பு என ஒவ்வொன்றையும் அழகாகவும் மாடர்னாகவும் செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் அஞ்சலி… அழகான கிராமத்து பெண்ணாக வந்து கவர்ச்சியில் ‘கிறங்கடி’த்திருக்கிறார். ‘கும்’முன்னு, ‘ஜம்’முன்னு, பெண்ணாகவும் ‘பன்’னாகவும் ரசிகர் இதயங்களை பதம் பார்த்திருக்கிறார். நீச்சல் கற்றுக் கொடுக்கும் காட்சியில் நம்மை தண்ணீர் இல்லாமலேயே மூழ்கடிக்கிறார்.

காமெடியில் நம்மை சூறாவளி சூரியாக சுழன்றடித்திருக்கிறார். சுராஜ் சூரியை முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். சூரி இங்கிலீஷ் பேசுவது தனி ஸ்டைல். இவரின் அடுத்த படத்தில் சூரி நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளது.

இவர்கள் கூட்டணியில் வரும் கும்கி அஸ்வின், பிளாக் பாண்டி, தளபதி திணேஷ், மொட்டை ராஜேந்திரன் என ஒவ்வொரும் சரியான தேர்வு. அனைவரும் செம… இவர்களுடன் விவேக். அதுவும் டபுள் ஆக்டிங். ஆக்ட்டிங் மட்டுமல்ல டபுள் மீனிங்… டபுள் பொண்டாட்டி என எல்லாம் சூப்பர். ‘சைனா மேக்காச்சே… டபுள் சிம் போட்டுவானோ…’ என கூறும்போது அப்ளாஸ்.

மேலும் பிரபு, ரேகா, ராதாரவி, ஜான் விஜய், சித்ரா லட்சுமணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம். அனைவரும் கச்சிதமான தேர்வு. ஒரு ஐட்டம் டான்ஸ் போட்டு அழுத்தமான இதயங்களை ஆடவைத்திருக்கிறார் பூர்ணா.

காமெடிதான் அதிரடி என்றால் இசை ‘மெகா குத்து’ அதிரடி. தமனின் இசையில் எல்லா பாடல்களும் ஆட்டத்துடன் தாளம் போட வைக்கும் ரகம். கிராமத்து அழகையும் நாயகிகளின் அழகையும் அழகாய் கவிதையாய் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் UK செந்தில்குமார்.

படம் முழுவதும் கிளாப்ஸ்களை அள்ளுகிறார் வசனகர்த்தா. கிராமம், சிட்டி, குடும்பம், கவர்ச்சி, காதல், செண்டிமென்ட் என சகலவற்றையும் கலந்து வல்லவனாக இந்த அப்பாடக்கதை தந்திருக்கிறார் சுராஜ்.

எழுபது சதவிகித படத்தை ஜாலியாக கொடுத்துவிட்டு அரசியல், தேர்தல் என தேவையில்லாத காட்சிகள் ஏனோ… அதுவும் ஏதோ திணிக்கப்பட்டு குறுகிய நேரத்துக்குள் முடிவதால் மனதில் ஒட்டவில்லை.

மொத்தத்தில் இந்த சகலகலா வல்லவன் – அப்பாடக்கர்… காமெடி டக்கர்…

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்