சேதுபதி விமர்சனம்

நானும் ரௌடிதான் என கெத்து காட்டிய விஜய் சேதுபதி, இதில் நிஜமான கெத்து, போலீஸ்தான் என கம்பீரத்துடன் கூறிவருகிறார். மீண்டும் ரம்யா நம்பீசனுடன் ஜோடியாக இணைந்துள்ளார். இந்த சேதுபதி எப்படி என்பதை பார்ப்போம்..

நடிகர்கள் : விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல ராம மூர்த்தி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ‘தெகிடி’ நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்
இயக்கம் : அருண்குமார்
தயாரிப்பாளர் : வான்சன் மூவிஸ் – ஷான் சுதர்சன்

கதைக்களம்…

ஆசையான கணவன், அன்பான அப்பா என குடும்பம் மீது பாசமாக வாழும் நேர்மையான போலீஸ் அதிகாரி சேதுபதி. ஒருமுறை இவரது காவல்துறையை சார்ந்த போலீஸை ரவுடி கும்பல் தீவைத்து கொளுத்திவிட அந்த கேஸை கையில் எடுக்கிறார்.

அதற்கு காரணம் வாத்தியார் (வேல ராம்மூர்த்தி) என்று தெரிந்து, அரெஸ்ட் செய்தால், அவர் ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்.

இதனிடையில் தங்க செயின் திருட்டு கேஸில் ஒரு பள்ளி மாணவனை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வருகிறார் சேதுபதி. அப்போது தவறுதலாக அந்த மாணவனை சுட்டு விடுகிறார்.

இதனால் சஸ்பெண்ட் ஆகும் சேதுபதியை மீண்டும் பணியில் சேர விடாமல் வாத்தியார் தடுக்கிறார். அதன்பின்னர் இறுதியில் அவர் பணியில் சேர்ந்தாரா? வில்லனை என்ன செய்தார்? என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்..

சேதுபதி.. விஜய்சேதுபதிக்கு இந்த கேரக்டர் செம பிட். பில்டப் காட்சிகள் இருந்தாலும் யதார்த்தம் மாறாத குடும்ப கம்பீரம். மனைவியுடன் சண்டை இருந்தாலும் குழந்தைகள் முன் காட்டிக் கொள்ளாத ஒரு சூப்பர் அப்பா இவர்.

குட்டீஸ் உடன் இவர் அடிக்கும் லூட்டி காட்சிகள் நிறைய குழந்தைகளை ஏங்க வைக்கும். தன் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குவது என அப்பா கேரக்டரிலும் நல்ல ஸ்கோர் செய்துள்ளார்.

ஒரு புகார்தாரர் தன் மனைவியை காணவில்லை என புகார் கொடுக்கும்போது அவரின் பிள்ளையை வெளியில் இருக்கச் சொல்லும் காட்சிகள் நச்.  அடிவாங்கி கொண்டே அடியாளை பார்த்து நீ முறைச்சா சிரிப்பு வருது என கூறுவது சேதுபதிக்கே உரிய கெத்து.

ரம்யா நம்பீசன்.. கொஞ்சம் குண்டாக இருந்தாலும், அந்த அம்மா கேரக்டருக்கு அவ்வளவு அழகு சேர்த்திருக்கிறார். கண்களாலும் உடலாலும் ரசிகர்களை கவர்கிறார். சேதுபதியுடன் பர்பெக்ட் மேட்ச்.

sethupathi movie stills

என் புருஷன் இப்போ சண்டை போடுவான். நாளைக்கு கொஞ்சுவான். அதுக்காக நான் இங்க இருக்கனும் என தன் அம்மாவிடம் கூறும்போது கைத்தட்டலை அள்ளுகிறார்.

வில்லன் வாத்தியாராக வரும் வேல ராமமூர்த்தி அலட்டி கொள்ளாத வில்லன். ஹீரோவுக்கு இணையான கேரக்டர். இவரின் விசுவாசியாக வரும் லிங்கா, விவேக் பிரசன்னா ஆகியோர் கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றனர்.

இவர்களுடன் சேதுபதியின் இரு குழந்தைகள், தனுஷ்ரா மற்றும் ராகவன் இருவரும் தங்கள் அழகான நடிப்பால் நம்மையும் அந்த குடும்பத்தில் சேர்க்கின்றனர்.

விசாரணை கமிஷன் அதிகாரி, போலீஸ் கமிஷ்னர், போலீஸ் மூர்த்தி என அனைவரும் நம்மை கவர்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு ப்ளஸ் ஆக பாடல்களும் பின்னணி இசையும் அமைந்துள்ளது. பின்னணி இசை பழையதை நினைவு படுத்தினாலும் ஓகேதான். அனிருத் குரலில், நான் யாரு கொய்யாலா.. நானே ராஜா என்ற பாடலை ஹீரோவுக்கும் வில்லனுக்கும் கொடுத்து கெத்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சண்டை காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார் ராஜசேகர். தீபிகாவின் ஆடை டிசைன்களில் ரம்யாவும் சேதுபதியும் ப்ரைட்டாக உள்ளனர்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் வீட்டின் உட்பகுதி என அனைத்தும் அருமை. ரொமான்ஸ் காட்சிகளும் கண்களும் நிறைவை தருகின்றன. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நச்.

படத்தின் ப்ளஸ்…

  • சேதுபதியின் மாஸ் லுக்
  • அழகான குடும்ப கதையில் ஒரு கம்பீரம்
  • ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே கெத்து பாடல்
  • பின்னணி இசை + வில்லன் வேல ராமமூர்த்தி

படத்தின் மைனஸ்…

  • யூகிக்கமுடியும் காட்சிகள்
  • கொஞ்சம் பழகிய கதைதான்

ramya sethupathi movie stills

அருண்குமார் இயக்கத்தில் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையில் காவல்துறைக்கே உரிய ஒரு கம்பீரம் உள்ளது. பாசத்தையும் நேர்மையையும் அழகாக காட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் சேதுபதி…  பாசமான மாஸான போலீஸ்

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்