தாரை தப்பட்டை விமர்சனம்

பாலா மற்றும் சசிகுமார் இணைந்துள்ளதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இது இளையராஜாவின் 1000வது படம் என்பதால் இந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த கூட்டணியில் தாரை தப்பட்டையின் சப்தம் எப்படி என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : சசிகுமார், வரலட்சுமி சரத்குமார், சதீஷ் கௌசிக், அமுதவாணன், ஆர். கே. சுரேஷ், ஆனந்தி, காவ்யா ஷா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : இளையராஜா
ஒளிப்பதிவு : செழியன்
படத்தொகுப்பு : ஜி. சசிகுமார்
இயக்கம் : பாலா
தயாரிப்பாளர் : சசிகுமார் – பாலா

 

கதைக்களம்…

புகழ்பெற்ற இசைக்கலைஞர் சாமி புலவர் (ஜி.எம்.குமார்). இவரின் மகன் சன்னாசி (சசிகுமார்) கரகாட்டக்குழு நடத்தி வருபவர். சசியை வெறித்தனமாக காதலிக்கிறார் இக்குழுவின் மெயின் நடனக்காரி சூறாவளி (வரலட்சுமி). வருவை சசி காதலித்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் வரலட்சுமியின் நடனத்தால் கவரப்படும் வில்லன் ஆர். கே. சுரேஷ், சசி சம்மதத்துடன் வரலட்சுமியை மணக்கிறார். வரலட்சுமி குழுவில் இல்லாததால் குழு உடைகிறது. இதனிடையே மணமான வரு காணாமல் போகிறார். என்ன ஆனார்? கணவன் என்ன செய்தார் என்பதை பாலா தனக்கே உரித்தான ரத்தமும் சதையுமாக கொடுத்திருக்கிறார்.

கதாபாத்திரங்கள்…

சசிக்குமாரின் இன்னொரு முகத்தை காட்டியிருக்கிறார் பாலா. நடனத்திலும் பின்னி எடுத்துவிட்டார் சசி. நேர்மையாக குழுவை நடத்த முடியாமல் தவிக்கும் தவிப்பு அசத்தல். க்ளைமாக்ஸில் இவரின் ஆத்திரம் வெறித்தனம். ஆனால் எல்லா படங்களிலும் இவர் நாயகியை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? அதுவும் கிளுகிளுப்பான வருவை ஏற்க மறுப்பது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம்.

படத்தின் ஹீரோ சசிகுமார் என்றாலும் அதிகம் ஸ்கோர் செய்பவர் வரலட்சுமி. இத்தனை நாள் இந்த லெட்சுமி வராமல் இருந்தது ஏனோ? தெரியவில்லை. இன்றுள்ள நடிகைகளுக்கு நடிப்பு மற்றும் கவர்ச்சியான மிரட்டல் விடுத்துள்ளார். சாராயம் அடிப்பதும், பச்சை பச்சையாக பேசுவதும் என வெளுத்து கட்டிவிட்டார். வருவே.. வருக… வருக…

தன் காதலன் மீது யாராவது கோவப்பட்டால் அவர்களை வெளுத்து வாங்குவதாகட்டும், அவர் மீது அதிகப்பட்ச அன்பை பொழிய அம்மணமா ஆட தயார் என சொல்வதாகட்டும் வரலட்சுமிக்கு ஒரு சல்யூட். ஆனால் அந்த கம்பீரம் இரண்டாம் பகுதியில் மிஸ்ஸிங் ஏனோ?

வில்லன்.. யாருடா இவர்? இப்படியொரு மிரட்டலா? என நெஞ்சங்களை பதறவைக்கிறார் ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ். அப்பாவியாக அறிமுகமாகி இடைவேளை காட்சியில் சூப்பர் ட்விஸ்ட். அதன்பின்னர் பெண்கள் கொடுமை, மனைவியை அடிப்பது, சாமியாரிடம் பேரம் பேசுவது என படத்தின் க்ளைமாக்ஸ் முழுவதும் இவரது ராஜ்ஜியம்தான்.

இவர்களுடன் காயத்ரி ரகுராம், ஜி.வி. குமார், அமுதவாணன், ஆனந்தி, காவ்யா ஷா என ஒவ்வொருவரும் தங்கள் முத்திரையை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். பாலாவின் செலக்ஷன் சோடை போகாது என்பதற்கு இவர்களே சான்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மற்றொரு நாயகன் இளையராஜா.. தனது 1000மாவது படம் என்பதாலா? அல்லது கரகாட்ட இசை என்பதாலா? அல்லது பாலா படம் என்பதாலா? என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இசையால் நம்மை கட்டி போடுகிறார்.

இதில் ‘இடறினும்..’ மற்றும் ‘ஆட்டக்காரி மாமன் பொண்ணு…’ ஆகிய இரண்டு பாடல்களை இளையராஜாவே எழுதியிருக்கிறார். திருவாசகத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘பாருருவாய…’ பாடல் அருமை. குத்து பாடலும் உண்டு. இருக்கையை விட்டு எழாமல் வைக்கும் மெலோடியும் உண்டு. சூப்பர்.

ஒளிப்பதிவாளர் செழியன் தஞ்சை மாநகரை கண்முன் கொண்டு வந்துள்ளார். நடன காட்சிகள் அருமை என்றால் வன்முறை காட்சிகள் அறுவருப்பின் உச்சக்கட்டம். அவர் என்ன செய்வார் பாலாவுக்காக செய்துள்ளார். படத்தொகுப்பாளர் ஜி. சசிகுமார் தன் பணியில் கச்சிதம்.

படத்தின் ப்ளஸ்…

  • பாலாவின் டச் + இளையராஜாவின் இசை
  • வரலட்சுமி + ஆர்கே சுரேஷ் + சசிகுமார்

படத்தின் மைனஸ்…

  • கொடூரம் + வன்முறையின் உச்சம் + கெட்ட வார்த்தைகள்
  • தண்ணி அடிக்கும் காட்சிகள் + பெண்கள் கொடுமை

பாலா… இவருக்கு மட்டும் எப்படி இப்படியான கதைக்களம் கிடைக்கிறது எனத் தெரியவில்லை. நாம் பார்த்து பழகி போன நட்சத்திரங்களை தன் பட்டறையில் மெருகேற்றி இருக்கிறார்.

நம் பார்வையில் படும் மனிதர்கள் பாலா பார்வை பட்டால் பலம் கூடிவிடும் போல. ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அப்படியொரு கோணத்தில் கொடுத்துள்ளார். கரகாட்டம், வேலையின்மை, காதல் என மெல்ல நகரும் திரைக்கதையின் இறுதியில் இப்படியொரு கொடூரமா? என திகைக்க வைக்கிறார். நிறைய விருதுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் தாரை தப்பட்டை… கொலை வெறி குத்தாட்டம்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்