துணை முதல்வர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாக்யராஜ் திரைக்கதை வசனத்தில் உருவாகியிருக்கும் படம் துணை முதல்வர். இவர் இம்முறை ஜெயராம், ஸ்வேதாமேனன், சந்தியா போன்ற கேரள நட்சத்திரங்களுடன் கூட்டணி வைத்து களம் இறங்கியுள்ளார்.

கதை…

மஞ்சமாக்கனூர் என்றொரு கிராமம். கிராமத்தின் பெயரைப் போலவே ஊரில் இருவரைத் தவிர அனைவரும் மாக்கான்களாக இருக்கின்றனர். அந்த இருவரே பாக்யராஜ் மற்றும் ஜெயராம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஊரைச் சுற்றிலும் ஆறுகள் சூழ்ந்து இருப்பதால் அவசர தேவைக்கு கூட பரிசல் மூலம்தான் செல்ல வேண்டும். மேலும் பள்ளிக்கூடம், மருத்துவமனை எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு கிராமம். எனவே மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கிராமத்தில் உள்ள ஒருவரே சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் பாக்யராஜை சுயேட்சை வேட்பாளராக நிறுத்தி ஜெயிக்க வைக்கின்றனர்.

இரு கட்சிகளும் சுயேட்சையின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க முயல்கின்றனர். சட்டசபைக்கு சென்றும் சாதிக்கமுடியாமல் முடியாமல் போனதால் பாக்யராஜ்-ஜெயராம் இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர். தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க நிறைய செலவழிப்பார்கள். அப்போது ஊரின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பதால் பாக்யராஜ் இறந்து விட்டதாக அரசாங்கத்தை நம்ப வைக்கின்றனர்.

இடைத்தேர்தல் வருகிறது. இவர்களின் திட்டம் நிறைவேறியதா? பாக்யராஜ் மீண்டும் உயிருடன் வந்தாரா? ஆட்சி அமைந்ததா? என்பதே துணை முதல்வரின் மீதிக்கதை.

கதையின் பாத்திரங்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் தான் என்றுமே சோடை போவதில்லை என்பதை தன் கதை வசனத்தில் நிரூபித்திருக்கிறார் பாக்யராஜ். இவரின் பார்முலாவில் வழக்கமான இரட்டை அர்த்த வசனங்கள்… மன்னிக்கவும் எல்லாமே நேரிடை வசனங்கள். தன் ரசிகர்களை ஏமாற்றாமல் நன்றாக நடித்திருக்கிறார்.

பாக்யராஜ் கூட்டணியில் ஜெயராமும் கலக்கி இருக்கிறார். இவரும் இடையே பலான சமாச்சாரங்களை பேசி இளசுகளின் தைதட்டல்களை அள்ளுகிறார். தன் வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.

பாக்யராஜின் மனைவியாக வரும் ஸ்வேதா மேனன் அறிமுக காட்சியில் ஆரம்பித்து படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ரசிகர்களை சூடேற்றுகிறார். இரண்டு குத்துப்பாடலிலும் இவர் ஆடி ரசிகர்களை குலுங்க வைக்கிறார். நடிப்பில் பாஸ் மார்க்.

ஜெயராமின் ஜோடியாக வருகிறார் ‘காதல்’ சந்தியா. (பாவம்) ஆனாலும் மப்பும் மந்தாரமும் வந்து இவரும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்.

மற்றபடி பாக்யராஜின் ஆஸ்தான கலைஞர்கள் ஜீனியர் பாலையா, செம்புலி ஜெகன் மற்றும் மனோபாலா, டிபி. கஜேந்திரன் ஆகியோரும் உண்டு.

ஜெய், பாலாஜி, பிரதீப் ஆகியோரின் இசையில் செம குத்து பாடல்கள். ஸ்வேதா சந்தியாவின் ஆட்டத்திற்கு ஏற்ற இசைதான். பின்னணி இசை சுமார் ரகமே. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் ஓரளவே ரசிக்க வைத்திருக்கிறது.

பாக்யராஜின் கைப்பக்குவத்தில் ரா. விவேகானந்தன் சமையல் சற்று மணக்கச் செய்கிறது. தனியாக சமையல் செய்தால் மட்டுமே இயக்குனரின் பக்குவம் நமக்குத் தெரிய வரும்.

படத்தில் திறமையான நடிகர்கள் இருந்தும் நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் சரிபாதி 117. பின் எப்படி மெஜாரிட்டி இல்லாமல் போனது. சொல்லப்பட்ட கதை மற்றும் வசனங்கள் நன்றாக இருந்தும் சின்னத்திரை சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. ஹோட்டல் வரவேற்பாளர் சொல்லித்தான் இவர்களுக்கு அரசியல் தெரிவதாக காட்சிகள். அவர் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

துணை முதல்வர் படத்திற்கு துணையுடன் போகலாம். ஆனால் குடும்பத்தோடு போக முடியுமா? எதற்கு இவ்ளோ காமநெடி வசனங்கள் தெரியவில்லை.

மொத்தத்தில் ‘துணை முதல்வர்’ – இன்னும் மெஜாரிட்டி தேவை.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்