உப்பு கருவாடு விமர்சனம்

‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ ஆகிய தரமான படங்களை தொடர்ந்து ராதா மோகன் இயக்கியுள்ள படம் ‘உப்பு கருவாடு’. இந்த உப்பு கருவாட்டை கொஞ்சம் ருசித்து பார்ப்போமோ… (பாஸ் நீங்க சைவம் இல்லையே?)

நடிகர்கள் : கருணாகரன், நந்திதா, மயில்சாமி, நாராயணன் லக்கி, சதீஷ் கிருஷ்ணன், சாம்ஸ், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஸ்டீவ் வாட்ஸ்
ஒளிப்பதிவு : மகேஷ் முத்து சுவாமி
படத்தொகுப்பு : டிஎஸ் ஜெய்
இயக்கம் : ராதா மோகன்
தயாரிப்பாளர் : ராம்ஜி நரசிம்மன்

கதைக்களம்…

சினிமாவில் ஒரு நல்ல இயக்குனராகிவிட வேண்டும் என வாய்ப்புக் தேடி அலைகின்றனர் சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள். (கருணாகரன், சாம்ஸ், நாராயணன்) பின்னர் மேனேஜர் பாண்டியன் (மயில்சாமி) உதவியோடு மீன் எக்ஸ்போர்ட் தொழிலதிபர் ஜெயராமன் ஐயாவை (எம் எஸ் பாஸ்கர்) சந்திக்கின்றனர். அவர் தன் மகள் மஹாவை (நந்திதா) நாயகியாக்கினால் படம் தயாரிக்க ஒப்புக் கொள்கிறார்.

எனவே, ஒப்புக் கொள்ளும் இவர்கள், சுட்டு போட்டாலும் நடிப்பு வாரத நந்திதாவை எப்படி நடிக்க வைத்தார்கள்? இதனால்தான் அவர்கள் சந்திக்கும் போராட்டங்களே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

கருணாகரன் இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவரும் ஹீரோவாகிவிட்டதால், காமெடி செய்ய மாட்டார் போலிருக்கிறது. மனிதர் படத்தில் சீரியஸாகவே வருகிறார். அவ்வப்போது மட்டும் காமெடிகளை செய்து விட்டு போகிறார்.

அவர் காமெடி செய்யாவிட்டால் என்ன? அதான் நாங்க இருக்கோம்ல… என மயில்சாமி, சாம்ஸ், டவுட் செந்தில் மூவரும் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் நகைச்சுவையே படத்திற்கு நவரசத்தை கூட்டியுள்ளது. இதில் சாம்ஸ் மற்றும் டவுட் செந்தில் அதிக கவனம் ஈர்க்கின்றனர். இவர்களின் கூட்டணியை இனி வரும் படங்களில் எதிர்பார்க்கலாம்.

இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர் மற்றும் குமரவேல் இருவரும் காமெடியிலும் குணசித்திர நடிப்பிலும் கைத்தட்டல் பெறுகின்றனர். ராதா மோகன் குமரவேலுக்காகவே காட்சிகளை வைப்பாரா எனத் தெரியவில்லை. அவரும் சளைக்காமல் ஸ்கோர் செய்து விடுகிறார்.

டாடி சரவணன், நாராயணன், ஹீரோவாக நடிப்பவர், ஐயா மனைவி, ஆகியோர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

நந்திதா தன் கொஞ்சல் நடிப்பால் அதிக கவனம் ஈர்க்கிறார். ஆனால் குழந்தைத்தனமே நாயகி இவர்தானா என்பதை மறக்க செய்கிறது. உமா கேரக்டரில் ரஷிதா கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். தன் அழகான நடிப்பால் பாஸ் மார்க்கும் பெறுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கார்க்கியின் பாடல் வரிகள் ஓகே ரகம். ஆனால் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஸ்டீவ் வாட்ஸ் இசையில் வேல்முருகன் பாடிய உப்பு கருவாடு குத்துபாடல் மட்டுமே ஆட்டம் போடும் ரகம்.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி கடற்கரை காட்சிகளை கவிதையாக்கி இருக்கிறார். எடிட்டிங் செய்த ஜெய் இன்னும் எவ்வளவோ கத்தரித்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • காமெடி + வசனங்கள்
  • எதிர்பாராத க்ளைமாக்ஸ்
  • உதவி இயக்குனர்கள் படும் அவஸ்தை

 படத்தின் மைனஸ்…

  • முதல்பாதியின் நீளம்
  • காட்சிகளில் நாடகத் தன்மை
  • வழக்கமான கதை

கவர்ச்சி, வன்முறை இல்லாத குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படத்தை ராதா மோகன் தந்திருக்கிறார். காமெடியில் கோட்டை கட்டியவர் காட்சிகள் கொஞ்சம் விட்டுவிட்டார். தனது முந்தைய படங்களில் கொடுத்த உணர்வு பூர்வமான கவிதைகள் இதில் முற்றிலும் மிஸ்ஸிங். மொழி, பயணம், படைப்புகளை காட்டிலும் இதில் கொஞ்சம் உப்பு குறைவுதான்.

மொத்தத்தில் உப்பு கருவாடு… மணம் இருந்தாலும் ருசி குறைவே!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்