வை ராஜா வை

ஐஸ்வர்யா தனுஷின் இரண்டாவது படம் ‘வை ராஜா வை’. கௌதம் கார்த்தி-ப்ரியா ஆனந்த், விவேக் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் கைகோர்த்து களம் இறங்கியுள்ளார். இதில் தனது முத்திரையை பதித்துள்ளாரா? என்பதை பார்ப்போம்.

கதையின் களம்…

குழந்தை பருவம் முதலே இஎஸ்பி திறமை கொண்டவர் கௌதம் கார்த்திக். அதாவது அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியும் சூப்பர் பவர் நிறைந்தவர்.

நண்பர் சதீஷ் பணிபுரியும் அலுவலகத்தில் சேர்கிறார். ஒரு கட்டத்தில் அங்கு பணிபுரியும் விவேக் இவரின் சூப்பர் பவரை தெரிந்து கொள்கிறார். ஒரு பெரிய சூதாட்டத்தில் சிக்கிக் கொண்ட தன்னை காப்பாற்ற இவரின் உதவியை நாடுகிறார். இவருக்கும் அச்சமயம் பணம் தேவைப்படுவதால் ஒரு முறை மட்டும் சூதாட சம்மதிக்கிறார்.

இவர்களின் சூதாட்டத்தில் தோல்வி அடைந்த டேனியல் பாலாஜி சூப்பர் பவர் கொண்டு தனக்கு உதவ வேண்டுமென்றும் இல்லையென்றால் குடும்பத்தாரை கொன்று விடுவதாக நாயகனை மிரட்டுகிறார். அதன்பின் என்ன செய்தார்? சூதாட்ட கும்பலிடம் இருந்து தன் குடும்பத்தாரை எப்படி காப்பாற்றினார் என்பதெல்லாம் இப்படத்தின் மீதிக்கதை சொல்லும்.

கதாபாத்திரங்கள்…

கௌதம் கார்த்திக் ஒரு லவ்வர் பாய். அவரது முகம் மென்மையானது. கொடுத்த பாத்தித்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் படத்தின் தன்மைக்காக சீரியஸாகவே வருகிறார். பாடல்காட்சியில் மட்டும் கொஞ்சம் சிரிக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளை இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.

இவரின் காதலியாக ப்ரியா ஆனந்த். பெற்றோர்கள் சம்மதம் சொல்லிவிட்டதால் ரொமான்ஸ் இல்லை. காதல் காட்சிகள் இரண்டு நிமிடத்தில் சொல்லி முடிக்கப்படுவதால் அதுவும் சப்புன்னு ஆச்சு. இதனால் ஏமாற்றமடைந்த நமக்கு தன் இடுப்பை அழகை காட்டி சமாதானம் தருகிறார்.

காமெடியில் கலக்கி வந்த விவேக் தற்போது குணசித்திர கேரக்டர் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். சபாஷ் சார். முதல் பாதியை தன் நகைக்சுவையால் வேகமாக கொண்டு செல்கிறார். சதீஷும் காமெடி செய்திருக்கிறார். இருவரும் இணைந்த பின் படம் சீரியஸாக செல்வதால் காமெடிகள் குறைந்து விட்டது.

வில்லனாக டேனியல் பாலாஜி நடித்திருக்கிறார். இவரிடம் மிரட்டல் கொஞ்சம் குறைவே. இன்னும் மிரட்டியிருக்கலாம். டாப்ஸி சிறிது நேரம் வந்தாலும் டாப்தான். அழகாக தன் பணியை செய்திருக்கிறார்.

படம் முழுக்க நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ஒருவரின் காட்சி முடிவடையும் போது அடுத்த நட்சத்திரம் என்ட்ரீ கொடுக்கிறார். மனோபாலா, எஸ்.ஜே. சூர்யா, காயத்ரி ரகுராம், இயக்குனர் வசந்த், போஸ் வெங்கட், ஸ்ரீரஞ்சனி, சுவாமிநாதன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நட்சத்திரங்கள் பயன்பாடு படத்தில் குறைவாகவே உள்ளது.

யுவனின் இசையில் இளையராஜா பாடலும், கானா பாலா பாடலும், பச்சை வண்ணப் பூவே பாடலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். பின்னணி இசையும் நன்றாகவே உள்ளது. வேல்ராஜின் ஒளிப்பதிவினால் ‘பச்சை வண்ணப் பூவே…’ லொக்கேஷனும் ப்ரியா ஆனந்தின் அழகும் மேலும் ரசிக்க வைக்கிறது.

ஆண் இயக்குனர்கள் குத்து பாட்டுக்கு பெண்களை ஆடவைப்பார்கள். இவர் பெண் என்பதால் ஒரு குத்துபாட்டுக்கு எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து வந்துள்ளார் போலும். க்ளைமாக்ஸ் காட்சியில் ‘கொக்கி குமாராக’ தனுஷ் வரும்போது விசில் சத்தம் அரங்கை கிழிக்கிறது.

மற்ற சில டைரக்டரை போல் அல்லாமல் தனுஷ், டாப்ஸி போன்ற கேரக்டர்களை படத்தின் கதைக்கேற்ப கொண்டு வந்ததில் ஐஸ்வர்யாவின் புத்திசாலித்தனம் தெரிகிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்து விட்டது. கேசினோ சம்பந்தப்பட்ட காட்சிகளை ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் உருவாக்கியிருக்கிறார்கள்.

வை ராஜா வை : நம்பிக்கையில் கொஞ்சம் கை ‘வை’த்து விட்டார்கள்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்