வேதாளம் விமர்சனம்

‘வீரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. இந்த வெற்றிக் கூட்டணியில் ராக் ஸ்டார் அனிருத்தும் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்பு எழுந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் எந்தளவு பூர்த்தி செய்துள்ளது என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : அஜித், ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன், மொட்டை ராஜேந்திரன், அஸ்வின், சூரி, தம்பி ராமையா, கபீர் துகான் சிங், ராகுல் தேவ், வித்யூலேகா ராமன், கோவை சரளா, மயில்சாமி, பாலசரவணன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : அனிருத்
ஒளிப்பதிவு : வெற்றி
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : சிவா
தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா – ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ்

கதைக்களம்…

கொல்கத்தாவில் தங்கை லெட்சுமி மேனனுடன் குடியேறுகிறார் பாசக்கார அண்ணன் அஜித். சூரியின் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்யும் அஜித் ஒருமுறை வில்லனுக்கு எதிராக சாட்சி சொல்கிறார். இடையே வக்கீல் ஸ்ருதியுடன் காதல் என படம் செல்கிறது. பின்னர் வில்லன் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க, வில்லன் கோஷ்டிகளை தேடி போய் கொல்கிறார்.

ஒரு சூழ்நிலையில் இவர் சாதாரண டிரைவர் இல்லை. இவருக்கு பலமான பின்னணி இருக்கிறது என தெரிய வருகிறது. அப்படியென்றால் இவர் வேஷம் போட்டது எதற்கு? இவரின் உண்மையான முகம் என்ன? என்ற கேள்விகளுடன் இரண்டாம் பகுதி ஆரம்பமாகிறது.

கதாபாத்திரங்கள்…

தன் ரசிகர்களை எந்த விதத்திலும் ஏமாற்றக்கூடாது என்பதில் அஜித் தெளிவாக இருந்திருக்கிறார். பாசம் காட்டும் அண்ணனாகவும் பயம் காட்டும் தாதாவாகவும் வாழ்ந்திருக்கிறார்.

வெள்ளந்தியான கால் டாக்சி டிரைவராக கலகலப்பூட்டியவர் பின்னர் அதிரடி ஆக்ஷனில் வெளுத்து வாங்கியிருக்கிறார். பெண்களுக்கான வசனத்திலும், டான் கேரக்டர் பன்ச் டயலாக் காட்சிகளிலும் தியேட்டரை தெறிக்க விடுகிறார்கள் ரசிகர்கள்.

இவரையடுத்து அதிக ஸ்கோர் செய்திருப்பவர் லட்சுமிமேனன். இதுநாள் வரை ரசிகர்கள் மனதில் நாயகியாக வாழ்ந்தவர் இனி தங்கையாக மாறினாலும் ஆச்சரியமில்லை. ஹேட்ஸ் ஆஃப் லட்சு!

வக்கீலாக ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். அஜித்தை கிண்டல் செய்யும் காட்சிகள் செம. ஆனால், இவருக்கும் அஜித்துக்கும் உள்ள காதல் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை.

இவர்களுடன் தம்பி ராமையா, சூரி, மயில்சாமி, கோவை சரளா என அனைவரும் அவரவர் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். ஆனால் காமெடிக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் கொடுத்திருக்கலாம். வில்லனாக வலம் வரும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங் இருவரும் அஜித் ரசிகர்களை மிரட்டியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அனிருத்தின் இசையே படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆளுமா டோலும் பாடல் காட்சிகளுக்கு அஜித் ரசிகர்களின் ஆட்டம் மற்றவர்களையும் ஆடவைக்கும். உயிர் நதி கலங்குதே… பெண்களை கலங்க வைக்கும் பாடல். ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் வெற்றி. முக்கியமாக அஜித்தின் டான் கெட்டப் காட்சிகள் ஓகே ரகம்.

படத்தின் ப்ளஸ்…

  • அஜித்தின் டபுள் கெட்டப் + வேதாளம் மாஸ்
  • அஜித் + லட்சுமி மேனன் பாசக் காட்சிகள்
  • அனிருத் பாடல்கள்
  • வெற்றியின் அழகான ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்…

  • சென்டிமெண்ட் காட்சிகள் இருந்தும் ஆக்ஷன் ஓவர்
  • அஜித் மற்றும் ஸ்ருதி காதல்

வீரம் படத்தின் கூட்டணி இதிலும் ஜெயித்திருக்கிறது. ரசிகர்களின் பல்ஸை அறிந்து அதில் கொஞ்சம் சென்டிமெண்டை கலந்து கொடுத்திருக்கிறார் சிவா. ஆனால் பாட்ஷா படத்தை இன்னொரு முறை பார்த்த எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை. நிகழ்காலம் மற்றும் கடந்த காலம் என்றால் ஏன் இதுபோன்ற கதைகளையே இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என தெரியவில்லை?

மொத்தத்தில் வேதாளம் : தெறிக்க விடும் கமர்ஷியல் மசாலா

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்