வில் அம்பு விமர்சனம்

இயக்குனர் சுசீந்திரன் தயாரித்திருக்கும் படம் இது. இரண்டு ஹீரோக்களுடன் மூன்று ஹீரோயின்கள் இணைந்திருக்கும் இந்த வில் அம்பு எப்படி பாய்ந்துள்ளது என்பதை பார்ப்போமா..?

நடிகர்கள் : ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, சாந்தினி, சமஸ்கிருதி ஷெனாய், ஹரிஷ் உத்தமன், யோகி பாபு, நந்தகுமார், நிஷா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : நவீன்
ஒளிப்பதிவு : மார்ட்டின் ஜோ
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : ரமேஷ் சுப்ரமணியம்
தயாரிப்பாளர் : சுசீந்திரன் மற்றும் நந்தகுமார்

கதைக்களம்..

குடிக்கார தந்தை வளர்ப்பில் சேரியில் வளரும் திருடன் ஸ்ரீ. இவரை காதலிக்கும் பள்ளி மாணவியாக சமஸ்கிருதி. நடுத்தர குடும்ப வளர்ப்பில் நன்றாக படித்த நாயகனாக ஹரிஷ் கல்யாண். ஆனால் இவருக்கோ போட்டோ கிராபி ஆர்வம். இவரும் ஸ்ருஷ்டியும் காதலிக்கின்றனர். இதில் சேரி பகுதியைச் சார்ந்த சாந்தினி ஒருதலையாய் ஹரிஷை காதலிக்கிறார்.

காதலிக்காக ஸ்ரீ நல்லவனாக மாற நினைக்கிறார். ஹரிஷ் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்கு செல்கிறார். அதன்பின் இவர்கள் ஐந்து பேரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

இரண்டு நாயகர்கள் என்றாலும் அதிகம் ஸ்கோர் செய்திருப்பவர் ஸ்ரீ. காரணம் அவருக்கான குறும்பு, திருட்டு, விளையாட்டு என ஜாலியான போர்ஷன்கள். காதலி வந்தவுடன் இவருக்குள் ஏற்படும் மாற்றங்கள் அருமை. போலீஸ் ஸ்டேஷனில் அசல்ட்டாக பதில் சொல்வதும், நண்பர் யோகிபாபுவை கலாய்க்கும் காட்சிகளும் டபுள் ஓகே.

ஹரிஷ் கல்யாண்… தன் விருப்பதை வெளிப்படுத்த முடியாகமல் விளம்பர படத்திற்காக அலைவதும், அப்பா பிள்ளையாக வாழ்வதும், தன் மீது தவறு இல்லை என நிரூபிக்கவும் இவர் செய்யும் முயற்சிகள் சபாஷ் ரகம். நாயகி ஸ்ருஷ்ட்டியுடன் இவருக்கு நல்ல மெமிஸ்ட்ரி.

சில காட்சிகளிலே வந்தாலும் கன்னக்குழியிலும், கவர்ச்சியில் கவர்கிறார் ஸ்ருஷ்டி டாங்கே.

சிறுவயது முதலே ஹரிஷை விரும்புவதும் அவர் வரும்போதெல்லாம் ரூட் விடுவதும், அவருக்காக போலீசிடும் சண்டையிடுவதும் என ஈர்க்கிறார் சாந்தினி.

இதில் அதிகம் சபாஷ் பெறுவது நாயகி சமஸ்க்ருதிதான். கண்களால் கவிதை பாடியிருக்கிறார். காதலனை கண்டிப்பது, வீட்டை விட்டு ஓடுவது, தந்தையிடம் அடிவாங்குவது என இவருக்கான ஸ்பேஸ் அதிகமே. இனி நிறைய படங்களில் இவரை எதிர்பார்க்கலாம்.

கதையோடு காமெடி செய்திருக்கிறார் யோகிபாபு. சேட்டு வீட்டில் ஆட்டை போட்டு புடவை விற்பது சூப்பர். அந்த தவறை மறைத்து போலீசில் சொல்ல மனப்பாடம் செய்து மாட்டிக் கொள்வது  அதி விட சூப்பர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘அப்போ எவனுக்கும் நீங்க வேலை கொடுக்கல…’ என்று கூறுவது நச். ஆங்காங்கே காமெடி செய்து படத்திற்கு கலகலப்பு ஊட்டியிருக்கிறார்.

இவர்களுடன் ஹரிஷ் உத்தமன் சில காட்சிகளே என்றாலும் தன் பாத்திரத்தில் ஜொலிக்கிறார். நந்தகுமார் சாந்தமாக இருந்து வில்லத்தனம் செய்வது புதுசு. ஊரில் நடக்கும் நல்லது கெட்ட கலந்து கொள்ளும் அந்த எம்எல்ஏ..வும் நம்மை பெரிதும் கவர்கிறார். (இவர்போல ஒரு எம்எல்ஏ கிடைக்க மாட்டாரா என்பதற்காக…)

ஹரிஷின் பெற்றோர், அக்கா நிஷா, மாமா மற்றும் ஸ்ரீயின் பெற்றோராக வரும் ஹலோ கந்தசாமி, சைவம் கலா ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அனிருத் குரலில் ‘ஆள சாச்சுப்புட்டாலே கண்ணாலே…’ பாடலும் நடனமும் அருமை. ரசிகர்களை கவரும். மற்ற பாடல்கள் கேட்கும் ரகம்.

மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவில் இரவு காட்சிகளும் கோயமுத்தூர் மாநகரமும் அழகு. படத்தின் மிக குறையாக தெரிவது ரூபனின் எடிட்டிங்கே. அருமையான திரைக்கதையை இவ்வளவு நீளமாக சொல்லத்தேவையில்லை. முக்கியமாக அரசியல்வாதிகளின் காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • கதை + திரைக்கதை
  • யோகிபாபு காமெடி
  • க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்

படத்தின் மைனஸ்….

  • அரசியல்வாதிகளின் காட்சிகள்
  • படத்தின் நீ…..ளம்.

இரண்டு ஹீரோக்கள் ஒரே ரூட்டில் பயணிக்கும் போது, சந்திக்க மாட்டார்களா? என ஏங்க வைத்து க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்.

இரண்டு ஹீரோக்களுக்கு மூன்று ஹீரோயினை கொடுத்து அதையும் அருமையாக முடித்திருப்பது நச். கடைசி 20 நிமிட க்ளைமாக்ஸ் சேசிங் ட்விஸ்ட் டபுள் ஓகே. ஆனால் படத்தின் நீளமான நாடகத்தனம் ரசிகர்களை நிச்சயம் சோதிக்கும்.

மொத்தத்தில் ‘வில் அம்பு…’ வச்சகுறி தப்பவில்லை…!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்