விசாரணை விமர்சனம்

லாக்கப் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மேலும் தரமான படங்களை கொடுத்து வரும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விசாரணை எப்படி என்பதை பார்ப்போமா?

நடிகர்கள் : தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, கிஷோர், முருகதாஸ், சரவண சுப்பையா, மிஷா கோஷல் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ்
ஒளிப்பதிவு : ராமலிங்கம்
படத்தொகுப்பு : கிஷோர் T.E. (Late)
இயக்கம் : வெற்றிமாறன்
தயாரிப்பாளர் : தனுஷ்
வெளியீடு : லைக்கா புரொடக்ஷன்

கதைக்களம்…

கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்படவே விசாரணைக்காக ஆந்திர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் நிரபராதிகளான தினேஷ், முருகதாஸ் மற்றும் அவரது நண்பர்கள். பல கட்ட விசாரணை கொடூரங்களுக்கு பிறகு நீதிபதியின் நேர்மையான தீர்ப்பால் விடுதலையாகின்றனர்.

பின்னர் ஒரு கட்டத்தில் தமிழக காவல் நிலையத்திற்கு சமுத்திரக்கனியால் அழைத்து செல்லப்படும் இவர்கள் மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கின்றனர். அதன் பின்னர் என்ன ஆனார்கள்? அங்கிருந்து தப்பினார்களா? வாய்மை வென்றதா? என்பதே இந்த விசாரணை.

கதாபாத்திரங்கள்…

விசாரணை கைதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் தினேஷ், முருகதாஸ் மற்றும் அவர்களது நண்பர்கள். போலீஸ் பிரம்படியின் வலி தாங்கமுடியாமல் ஒவ்வொருவராக பொய்யாக ஒப்புக் கொள்ளும்போது எவ்ளோ அடித்தாலும் செய்யாத தவறை ஒப்புக் கொள்ள மாட்டேன் என வைராக்கியமாக நிற்கும்போது கண்களை குளமாக்குகிறார் தினேஷ்.

அவர் அடி வாங்கும்போது நாமே ஒப்புக் கொள்ள சொல்லத் தோன்றும். முகம், காது, உடம்பு, பாதம் என ஒவ்வொரு பாகங்களும் அடிவாங்கும்போது கல் நெஞ்சங்களும் கலங்கும்.

அதன்பின்னர் காவல் நிலையத்தில் சுத்தம் செய்வது. கிஷோருக்கு போன் கொடுத்து உதவுவதும், ஆனந்தியை ஆபத்திலிருந்து காப்பாற்ற நினைப்பதும் என ஒவ்வொரு ப்ரேமிலும் முத்திரை பதிக்கிறார். ஹேட்ஸ் ஆப் தினேஷ்.

மேலதிகாரியான சரவண சுப்பையாவிடம் பணிந்து போவதும் தனக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளுடன் கோபம் கொள்வதும் என இரண்டு விதமான நடிப்பிலும் சபாஷ் பெறுகிறார் சமுத்திரக்கனி. க்ளைமாக்ஸ் காட்சியில் கைதிகளை காப்பாற்ற நினைப்பதும் முடியாமல் தவிப்பதும் என பார்வைகளில் தவிப்பை உணர வைக்கிறார்.

சிறிய வேடமே என்றாலும் தெலுங்கில் பேசி, தன் உணர்வுகளை புரிய வைக்கிறார் ஆனந்தி. இரக்கமுள்ள பெண் போலீஸாக மிஷா கோஷல். சில நிமிடங்கள் வந்தாலும் பளிச்சிடுகிறார்.

ஆடிட்டராக கிஷோர் கெத்து காட்டி பின்னர் உயிரை விட்டு நம்மை கவர்கிறார். என்னதான் போலீசுக்கு நாம் உதவினாலும் போலீஸ் புத்தி அவ்வளவுதான் என்று இவரிடம் நடந்துகொள்ளும் கேரக்டர்களும் சபாஷ்.

இவர்களுடன் வாழ்ந்த அந்த தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் அனைத்து போலீஸ் கேரக்டர்களுக்கும் ஒரு சல்யூட். மேலதிகாரிகளின் உத்தரவால் தங்கள் வேலையை தக்கவைத்துக் கொள்ள இவர்கள் படும் அவஸ்தை ஒரு பாடம். மொட்டைத் தல போலீஸ் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு பெரிய பலம் பாடல்கள், காமெடி காட்சிகள் இல்லாதது. ஒருவேளை இவை இருந்தால் இப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறைந்திருக்கலாம்.

காவல் நிலையம், கக்கூஸ், ஜெயில், கைதிகள், பிரம்படி, என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் கலை இயக்குனர் ஜாக்கி. இவருடன் கைகோர்த்து நிற்கிறார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம். கைதிகள் உறங்கும் இடம், குளிக்குமிடம், க்ளைமாக்ஸ் காட்சியில் ஒதுங்கி ஓடும் இடம் என தத்ரூபமாக தன் கேமராவால் அழகூட்டியிருக்கிறார்.

பாடல்கள் இல்லையென்றால் என்ன பின்னணி இசையிலும் பின்னுவோம்ல என ஜி.வி. பிரகாஷும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். அருமையான படத்தை ரசிகர்களுக்கு எடிட் செய்து கொடுத்து விட்டு நம்மை ஏங்க வைத்து விட்டு சென்று விட்டார் கிஷோர்.

படத்தின் ப்ளஸ்…

  • கேரக்டர் தேர்வு + திரைக்கதை
  • கலை + ஒளிப்பதிவு + பின்னணி இசை
  • யதார்த்தமான க்ளைமாக்ஸ்
  • கேஸை க்ளோஸ் செய்ய பொய்களை ஜோடிக்கும் காட்சிகள்

படத்தின் மைனஸ்…

  • வெளிவுலகுக்கு தெரியாமல் போகும் போலீஸ் அராஜகம்

கைதிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு இது பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு புதுமையான படைப்புதான். நாம் இதற்கு முன்பே சிறைச்சாலை மற்றும் சுதந்திர போராட்டங்களை படங்களை பார்த்திருந்தாலும் இது காவல் துறைக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்.

செய்யாத குற்றத்தை செய்தது போல் நடித்துக் காட்ட சொல்லும் போலீசிடம் மாட்டிக் கொள்வதும் பின்னர் நீதிபதி முன்பு உண்மையை உடைக்கும் காட்சிகளும் நிச்சயம் கைத்தட்டலை அள்ளும்.

விசாரணை கைதிகளின் மரணத்தை தற்கொலையாக்க போலீஸ் நடத்தும் நாடகம், பதவி உயர்வுக்காக உயிரை பலி கொடுக்கும் காட்சிகள், பந்தாடப்படும் சிறிய அதிகாரிகள், கைதிகளை பிடிக்கும் போராட்டத்தில் போலீஸ் சாவு என்ற நாடகம் என ஒவ்வொன்றையும் அப்பட்டமாக தோலுரித்துக் காக்கி சட்டையின் சுயரூபத்தை வெளி உலகுக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். தயாரிப்பாளர் தனுஷ் அவர்களுக்கும் கை தட்டலாம்.

மொத்தத்தில் விசாரணை… ‘போலீஸின் அராஜக ஆட்சி’

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்