யட்சன் திரை விமர்சனம்

ஆர்யா-விஷ்ணுவர்தன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ஐந்தாவது படம் ‘யட்சன்’. இதில் இயக்குனரின் தம்பி கிருஷ்ணாவும் இணைந்துள்ளார். இவர்களின் கூட்டணியில் ‘யட்சன்’ எப்படி வளர்ந்துள்ளான் என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, ஸ்வாதி ரெட்டி, கிஷோர், ஒய். ஜி. மகேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஜான் விஜய், ரோபா சங்கர், ஆர் ஜே பாலாஜி, அழகம் பெருமாள் மற்றும் பலர்.

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
இயக்கம் :  விஷ்ணுவர்தன்
படத்தொகுப்பாளர் : ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பாளர் : சித்தார்த் ராய் கபூர் மற்றும் விஷ்ணுவர்தன்

கதைக்களம்…

தூத்துக்குடி சின்னா தீவிர அஜித் ரசிகர் (ஆர்யா). ஒரு சிறிய தகராறில் கொலை செய்துவிட்டு சென்னைக்கு ஓடி வருகிறார். வெளிநாடு செல்ல நினைப்பவருக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே ஒரு கொலை செய்ய சம்மதிக்கிறார். இவர் கொல்ல வேண்டிய ஆள் தீபா சந்நிதி மீது காதல்.

அதுபோல பழனியில் உள்ளவர் கார்த்திக் (கிருஷ்ணா) இவர் தன் காதலி ஸ்வாதியின் உதவியுடன் சினிமாவில் நடிக்க சென்னை வருகிறார். வந்தவருக்கு அஜித்துடன் நடிக்க சான்சும் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் ஆர்யாவும் கிருஷ்ணாவும் தவறுதலாக இடம் மாறி வில்லன் கோஷ்டியிடம் மாட்டிக் கொள்கின்றனர். அதன்பின்னர் என்ன நடந்தது என்பதே இந்த யட்சன்.

கதாபாத்திரங்கள்…

தல ரசிகராக ஆர்யா, தன்னுடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். கொலை செய்துவிட்டு சென்னைக்கு ஓடிவந்து செய்யும் கலாட்டாக்கள் ரசிக்கும் ரகம். இவரும் சென்ட்ராயனும் சேரும் காட்சிகள் ஓகே. ஆனால் படத்தில் இன்னொரு ஹீரோ இயக்குனரின் தம்பி என்பதால் இவருக்கு தனி டூயட் எல்லாம் இல்லை.

கிருஷ்ணா… அண்ணன் இயக்கத்தில் கொஞ்சம் அலப்பரையே செய்துள்ளார். அதிலும் ஹீரோவாக சான்ஸ் தேடும் காட்சிகள் கொஞ்சம் அதிகம்தான். இவருக்கு வாய்ப்பளிக்க வரும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அவருடைய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார்.

ஹீரோயின்களில் ஸ்வாதி அதிக ஸ்கோர் செய்கிறார். தன்னுடைய குறும்புத்தன நடிப்பால் இளைஞர்களை கவர்கிறார். கிருஷ்ணாவை கட்டிப்பிடித்து மிஸ் யூ… மிஸ் யூ சொல்லி கிளுகிளுப்பூட்டுகிறார்.

தீபா சந்நிதி அமைதியான அழகான நடிப்பால் கவர்கிறார். இவர் சிறுமியாக இருக்கும் காட்சிகள் படத்தில் ஏதோ சொல்ல வருகிறது என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. படத்தின் சில காட்சிகளை தம்பி ராமையாவும் ஆர்.ஜே. பாலாஜியும் நகைச்சுவையாக நகர்த்த உதவுகின்றனர்.

இவர்களுடன் அஜய், வில்லன் ஹுசைன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஷ் உத்தமன், ஜான் விஜய், அழகம் பெருமாள், 5 ஸ்டார் கிருஷ்ணா, பொன்வண்ணன், யோகிபாபு, ஆர்த்தி ஆகியோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஜய் யேசுதாஸ், ரஞ்சித் பாடிய ‘பரபர பாடல்…’ யுவன், தன்விஷா பாடிய ‘கொஞ்சல…’ மற்றும் யுவன், ஆண்டனிதாசன், ப்ரியா பாடிய ‘காக்கா பொண்ணு…’ பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் பாடல்கள் வேறு வேறு இடத்திலும் நடைபெற்றாலும் அதிலும் இரு ஹீரோக்களை காட்டி தன் தம்பிக்கு மாஸ் சேர முயற்சித்திருக்கிறார்.

ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. ஆனால் அதற்கு திரைக்கதை ஒத்துவர வேண்டுமே. எழுத்தாளர்கள் சுபா மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோரின் வசனங்கள் படத்தின் கதையோட்டத்திற்கு பொருந்தவில்லை. பல காட்சிகளில் நாடகத்தன்மை உள்ளது.

விஷ்ணுவர்தன் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்

· பாடல்கள் + பின்னணி இசை

· ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு

· அழகான ஹீரோயின்கள்

படத்தின் மைனஸ்

· தெளிவில்லாத திரைக்கதை

· நீளமான காட்சிகள்

· தேவையில்லாத க்ளைமாக்ஸ் பாடல்

மொத்தத்தில் யட்சன்… யதார்த்தமானவன் இல்லை!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்